தனது மகள் கொலை செய்யப்பட்டதை ஃபேஸ்புக் பதிவின் மூலமாகவே டுகு என்கோசியாபான்ட்சி அறிந்துகொண்டார். அது ஆகஸ்ட் மாதம். 27 வயதான தனது மகள் ஒகுஹ்லேவை பல நாட்களாகத் தொடர்புகொள்ள முடியாமல் டுகு தவித்து வந்தார். இருப்பினும், அவரது மகள் அவ்வப்போது சில காலம் தொடர்பில் இல்லாமல் இருப்பது வழக்கமான ஒன்றுதான்.
ஆனால், ஒரு சனிக்கிழமை நாளில் டுகுவின் அண்டை வீட்டுக்காரர்கள் இருவர் அவரைத் தொடர்புகொண்டனர். ஃபேஸ்புக்கில் ஒகுஹ்லேவை காணவில்லை என்று காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பதைப் பார்த்ததாகவும், காயமடைந்த நிலையில் ஒகுஹ்லே இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றைப் பார்த்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
"அந்தப் புகைப்படத்தைப் பார்த்தபோது, அதில் இருந்த நபர் உயிரிழந்துவிட்டார் என்பதை உணர்ந்தேன். உற்றுப் பார்த்தபோதுதான் அது ஒகுஹ்லே என்பதைப் புரிந்துகொண்டேன்," என்கிறார் 50 வயதான டுகு.
அந்தப் புகைப்படத்தைப் பார்த்த பிறகு, தனக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரி ஒருவரை டுகு தொலைபேசியில் தொடர்புகொண்டார். புகைப்படத்தில் இருந்த பெண் கொலை செய்யப்பட்டு, நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள தென்னாப்பிரிக்காவின் குவாசுலு-நடால் மாகாணத்தில் விவசாய மையமாக விளங்கும் கோக்ஸ்டாட் நகருக்கு அருகிலுள்ள ஆற்றங்கரையில் உடல் வீசப்பட்டிருப்பதை அந்தக் காவலர் உறுதிப்படுத்தினார்.
ஆனால், வார இறுதி விடுமுறை காரணமாக உடற்கூறாய்வுக் கூடம் மூடப்பட்டு இருந்ததால், திங்கள்கிழமை காலைதான் ஒகுஹ்லேவின் உடலை டுகுவால் அடையாளம் காண முடிந்தது. அப்போது, அவரது உடல் சிதைக்கப்பட்டு இருந்ததையும், முகம் கடுமையாகத் தாக்கப்பட்டு இருந்ததையும் டுகு கண்டார். "அது மிகவும் வேதனையாக இருந்தது. அந்த உண்மையை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை," என்கிறார் டுகு.
ஒகுஹ்லேவுக்கு ஒன்பது மற்றும் மூன்று வயதில் இரண்டு குழந்தைகள் இருந்தனர். அவர் சிவில் பொறியியல் துறையில் மாணவியாகவும் இருந்தார். தென்னாப்பிரிக்க காவல்துறையின் புள்ளிவிவரங்களின்படி, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் கொல்லப்பட்ட 581 பெண்களில் ஒகுஹ்லேவும் ஒருவர்.
ஒட்டுமொத்தமாக இந்தக் காலகட்டத்தில் 5,590 கொலைகள் நடந்துள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தைவிட 204 குறைவு. கொலைச் சம்பவங்களைப் பாலின அடிப்படையில் காவல்துறை வகைப்படுத்தி வெளியிடுவது இதுவே முதல்முறை என்பதால், கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளைவிட அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த ஆண்டு கோடைக்காலத்தில் ஜோகன்னஸ்பர்க் நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள எகுர்ஹுலேனி மாவட்டத்தில், 12 பெண்களின் உடல் அரை நிர்வாண நிலையில் காயங்களுடன் மக்கள் நடமாடும் பகுதிகளில் வீசப்பட்டுக் கிடந்தன. இதைத் தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறையின் தீவிரம் குறித்து நாடு முழுவதும் மீண்டும் கடுமையான கண்டனக் குரல்கள் எழுந்தன.
உலகிலேயே பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக தென்னாப்பிரிக்கா உள்ளது.
இந்தக் கோடைக்காலக் கொலைச் சம்பவங்களுக்குப் பதிலளித்த அதிபர் சிரில் ரமபோசா, பெண்களுக்கு ஆபத்தான இடங்களைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்வதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பாதுகாப்புத் தணிக்கை நடத்தப்படும் என்று உறுதியளித்தார். மேலும், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறையினரின் கண்காணிப்பும் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால், கோக்ஸ்டாட் மற்றும் எகுர்ஹுலேனி மாவட்டத்தில் உள்ள கெம்ப்டன் பார்க் போன்ற பகுதிகளில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொது மக்களே முன்னெடுத்து வருவதை பிபிசி உலக சேவை கண்டறிந்தது.
டுகுவை பொறுத்தவரை, தனது மகளின் கொலை குறித்து அவரே விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளார். மகள் கொல்லப்பட்டுப் பல மாதங்கள் கடந்தும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.
"ஒகுஹ்லேவை அடக்கம் செய்த பிறகு அனைத்தும் அமைதியாகிவிட்டன, எந்த நடவடிக்கையும் இல்லை. காவல்துறையினர் முன்வந்து விசாரணை நடத்த வேண்டுமென்று நான் மிகவும் விரும்புகிறேன்."
தனது மகள் காணாமல் போன நாளில் அவர் யாருடன் இருந்தார் என்பதை வெளிப்படுத்தும் சிசிடிவி காட்சிகளை, நகரிலுள்ள உள்ளாட்சி அரசு கட்டடத்தில் இருந்து காவல்துறையினர் ஆய்வு செய்யத் தவறிவிட்டதாக டுகு கருதுகிறார். அந்தக் காட்சிகள் ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் அழிக்கப்பட்டுவிடும் என்றும் அவர் கூறுகிறார். இது குறித்து கருத்து கேட்டு தென்னாப்பிரிக்க தேசிய காவல்துறையை பிபிசி தொடர்புகொண்டது. ஆனால், இந்தச் செய்தி வெளியிடப்படும் நேரம் வரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பெண்கள் கொலைச் சம்பவங்களைக் கையாள்வதில் தனது ஒட்டுமொத்தச் செயல்பாட்டில் குறைபாடுகள் இருப்பதை காவல்துறை ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்கு "கூடுதல் முயற்சிகள்" தேவை என்று தற்காலிக காவல்துறை அமைச்சர் ஃபிரோஸ் கச்சாலியா தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 2024ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கைப்படி, பெண்கள் கொலை செய்யப்படும் வழக்குகளில் தீர்வு காணப்படாத வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், தென்னாப்பிரிக்க காவல்துறையினர் "போதிய பொருளாதார ஆதாரங்கள் இல்லாமலும், போதுமான உபகரணங்கள் இன்றியும், பாலின அடிப்படையிலான வன்முறையைத் திறம்படவும் உணர்வுபூர்வமாகவும் கையாள்வதற்குத் தேவையான பயிற்சி இல்லாமலும் உள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.
தற்போது, தனது மகளைப் பற்றிய தகவல்களை அறிந்தவர்களைத் தேடி விசாரிப்பதுடன், சிசிடிவி காட்சிகளையும் டுகு தேடி வருகிறார். இதன் மூலம் இந்தக் கொலை தொடர்பாக ஏதேனும் தடயங்கள் கிடைக்கும் என்று அவர் நம்புகிறார்.
அதிபர் ரமபோசா அளித்த உறுதிமொழிகள் இருந்தபோதிலும், எதுவும் மாறும் என்ற நம்பிக்கை அவருக்கு அதிகம் இல்லை. "ரமபோசா கூறியதைக் கேட்டேன். ஏதாவதொரு சம்பவம் நடந்த பிறகுதான் அரசு நடவடிக்கை எடுக்கிறது. கோக்ஸ்டாடில் இருக்கும் நாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், கண்ணுக்குத் தெரியாதவர்களாக நடத்தப்படுவதாகவும் உணர்கிறோம். அரசுக்கு எங்களைப் பற்றிக் கவலையில்லை" என்கிறார் அவர்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தென்னாப்பிரிக்கா இதுவரை என்ன முன்னேற்றம் கண்டுள்ளது என்று இந்த மாதத் தொடக்கத்தில் பிபிசி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ரமபோசா, பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்வதற்காக பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.




