அந்தத் திட்டத்தின் முதல் கட்டமான காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்புக்குத் தடை கோரியும் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானங்களை நீக்கக் கோரியும் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதோடு, மாநிலத்தில் இருந்து பாய்ந்து செல்லும் உபரி காவிரி நீரை ஒருதலைபட்சமாகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் கர்நாடக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ்நாட்டுக்குப் பலனளிக்கும் காவிரி (கட்டளை) - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வது நிறைவடைந்துள்ளதாக மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் குறிப்பு தெரிவிக்கிறது.
மத்திய அரசின் மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணை - காவிரி - வைகை - குண்டாறு இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் உள்ளது. காவிரி ஆற்றின் வெள்ள நீரை, காவிரி - வைகை - குண்டாறு நதிகளை இணைப்பதன் மூலம் தமிழ்நாட்டின் வறட்சி பாதித்த பகுதிகளுக்குத் திருப்பிவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது. இது திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள, மழையை மட்டுமே நம்பியுள்ள விவசாய நிலங்களுக்குப் பெரும் பயனளிக்கும் என்றும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மாயனூர் கிராமத்தில் கட்டளை அணைக்கட்டு அமைந்துள்ளது. 2008ஆம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமானப் பணிகள் 2014ஆம் ஆண்டு நிறைவடைந்தது. நதிநீர் இணைப்புத் திட்டத்துக்காகவே இந்த அணைக்கட்டு கட்டப்பட்டதாக தமிழ்நாடு நீர்வளத் துறையின் கொள்கைக் குறிப்பு தெரிவிக்கிறது. அதிலிருந்து கால்வாய் மூலம் நீரைத் திருப்பி வைகை மற்றும் குண்டாறு நதிகளுடன் இணைப்பதே இந்தத் திட்டம்.
கோதாவரி நீரை காவிரியில் உள்ள கல்லணையில் இணைப்பதுதான் முதலில் முன்மொழியப்பட்ட திட்டமாக இருந்தது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தேசிய நீர் வளர்ச்சி முகமை 2004ஆம் ஆண்டு தயாரித்திருந்தது. இந்தத் திட்டத்தின் இணைப்புப் பாதையை அதிக உயர மட்டத்திலான பாதையில் அமைத்து கல்லணையில் அல்லாமல் கட்டளை அணைக்கட்டில் இணைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது.
இந்தத் திட்டம் உள்ளிட்ட நதிநீர் இணைப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டு விரைந்து முடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இந்தத் திட்டத்திற்காக கட்டளை அணைக்கட்டில் இருந்து 262.19 கிமீ நீளத்திற்கு கால்வாய் அமைக்கப்பட உள்ளது.
"இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், காவிரி மற்றும் குண்டாறு வடிநிலங்களுக்கு இடைப்பட்ட ஒட்டுமொத்த 52,332.63 ஹெக்டேர் நிலப்பரப்பில், சுமார் 45,810.84 ஹெக்டேர் நிலத்திற்கு நீர்ப்பாசன வசதி உறுதி செய்யப்படும். மேலும், 6,521.79 ஹெக்டேர் நிலத்திற்குப் புதிய நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்," என்று தமிழ்நாடு அரசின் கொள்கைக் குறிப்பு தெரிவிக்கிறது.
இதில் முதல் கட்டத்திற்கு மட்டும் ரூ.6,941 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பான கேள்விக்கு மத்திய ஜல்சக்தி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. அதில் சில தரவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
"இந்தத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையின்படி, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தின் மூலம் காவிரி வடிநிலப் பகுதிக்குக் கிடைக்கப்பெற உத்தேசிக்கப்பட்டுள்ள உபரி நீருக்குப் பதிலாக, காவிரி ஆற்றின் கட்டளை அணையில் இருந்து சுமார் 2,252 மில்லியன் கன மீட்டர் நீரைத் திசைதிருப்பும் திட்டம் இதில் அடங்கியுள்ளது," என மத்திய ஜல்சக்தி அமைச்சகம் இந்தத் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் தெரிவித்துள்ளது.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டமானது, தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட நதிநீர் இணைப்புத் திட்டங்களில் ஒன்று என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி கோரி தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த முன்மொழிவும் கிடைக்கவில்லை என்றும் அமைச்சகத்தின் பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு - கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலு வரையில் காவிரிப் படுகையில் கிடைக்கும் உபரிநீருக்கு பிரத்யேக உரிமை கோரியும் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டமான காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்புத் திட்டம் உள்படப் பல்வேறு தடை கோரியும் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்ததாக தமிழ்நாடு நீர்வளத் துறையிக் கொள்கைக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த வழக்கில் தான் கர்நாடக அரசு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உமாபதி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இவர் தமிழ்நாடு அரசுக்கான உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வருகிறார்.
அந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதிலில், "இந்தத் திட்டங்கள் நீர்ப்பாசன அமைப்புகளை நவீனப்படுத்துதல், அவற்றின் செயல்திறனை அதிகரித்தல், நீர்ப்பாசனக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் அல்லது வெள்ள மேலாண்மை ஆகியவற்றுக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என்றும், காவிரிப் படுகையில் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் புதிய பாசன நிலப்பரப்புகளை உருவாக்கும் நோக்கம் இதில் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது" என்று நீர்வளத் துறையின் கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாடு முரண்பாடுகள் நிறைந்ததாக இருப்பதாகக் கூறுகிறார் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர். பாண்டியன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டத்திற்கு எதிராக கர்நாடக அரசு வழக்கு தொடர வாய்ப்புகள் இல்லை. மேட்டூர் அணையில் இருந்துதான் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்கிறது. அதை தமிழ்நாடு தன்னுடைய தேவைக்கு ஏற்ப மடைமாற்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றார்.
இது கர்நாடக அரசு முன்னெடுக்கும் போட்டி வழக்காகவே தெரிகிறது என்கிறார் பி.ஆர். பாண்டியன்.
"இந்தத் திட்டம் தற்போது தொடக்க நிலையிலேயே உள்ளது. பருவமழை மற்றும் வெள்ள காலங்களில் செல்லும் உபரி நீரை வறட்சி பாதித்த மாவட்டங்களுக்குத் திருப்பி பயன்படுத்த இந்தத் திட்டம் அவசியம். இதற்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில் மாநில அரசு மற்றும் இதைச் செயல்படுத்த முடியாது. இதற்கு மத்திய அரசும் நிதியுதவி செய்தால்தான் விரைவாகச் செயல்படுத்த முடியும்," என்றார்.




