ஒரு குழந்தை பிறக்கும்போது, அந்தக் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் குறித்து பெற்றோருக்குப் பல கனவுகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும்.
எதிர்காலத்தில் குழந்தைக்கு எந்தவித நோய்களும் வரக்கூடாது என்றும், அப்படியே ஏதேனும் உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளிக்க முன்கூட்டியே ஏதாவது செய்ய வேண்டும் என்றும் பெற்றோர் விரும்புகின்றனர்.
இதுபோன்ற எண்ணங்களால் தற்போது பல பெற்றோர், குழந்தை பிறக்கும் நேரத்தில் சேகரிக்கப்படும் தொப்புள் கொடி ரத்தம் மற்றும் தொப்புள் கொடி திசுக்களை ஸ்டெம் செல் வங்கிகளில் சேகரித்து, பாதுகாத்து வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தச் செயல்முறை 'ஸ்டெம் செல் வங்கி சேமிப்பு' என்று அழைக்கப்படுகிறது.
இவ்வாறு சேகரித்துப் பாதுகாக்கப்படும் செல்கள் எதிர்காலத்தில் ரத்தப் புற்றுநோய், தலசீமியா, சில வகையான ரத்தக் குறைபாடுகள், நோய் எதிர்ப்பு மண்டலக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படக்கூடும் என்று கூறி இதை ஒரு வகையான உயிரியல் முதலீடு எனத் தனியார் ஸ்டெம் செல் வங்கிகள் விளம்பரப்படுத்துகின்றன. இருப்பினும், இது தொடர்பாக சில முக்கியமான கேள்விகள் எழுகின்றன.
பிறக்கும்போதே சேகரித்துப் பாதுகாக்கப்படும் ஸ்டெம் செல்கள் எதிர்காலத்தில் அனைத்துவிதமான நோய்களையும் குணப்படுத்த முடியுமா? ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் தொப்புள் கொடி ரத்தம் மற்றும் திசுக்களைப் பாதுகாப்பது அவசியமா? தனியார் ஸ்டெம் செல் வங்கிகளுக்குப் பணம் செலுத்தி இவற்றைச் சேமித்து வைப்பது உண்மையிலேயே பயனளிக்குமா? அல்லது இது தேவையற்ற செலவா?
இப்படியான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. ஸ்டெம் செல் சேமிப்பின் மருத்துவப் பயன்கள், அதன் வரம்புகள் மற்றும் பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன? இங்கு விரிவாகப் பார்ப்போம்.
மருத்துவத்தில் ஸ்டெம் செல்கள் எனப்படும் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை நிரூபிக்கப்பட்ட பலன்களை வழங்கினாலும், தனியார் தொப்புள்கொடி ரத்த வங்கி தொடர்பான குறிப்பிடத்தக்க வரம்புகளும் உள்ளன. அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் இவற்றைத் புரிந்துகொள்வது அவசியம்.
ஸ்டெம் செல்கள் என்பவை, சிறப்புச் செயல்பாடுகளைக் கொண்ட செல்களாக மாறக்கூடிய அடிப்படை உயிரணுக்கள். இவை உடலில் உள்ள பல்வேறு திசுக்கள் மற்றும் உறுப்புகளின் வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
குழந்தை பிறந்த பிறகு, தொப்புள்கொடி மற்றும் நஞ்சுக்கொடியில் எஞ்சியுள்ள ரத்தம் 'தொப்புள்கொடி ரத்தம்' என்று அழைக்கப்படுகிறது.
பல்வேறு வகையான ஸ்டெம் செல்கள் இருந்தாலும், குழந்தை பிறக்கும்போது தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்து சேகரித்துப் பாதுகாக்கப்படுபவை பெரும்பாலும் ஹீமோபாய்டிக் ஸ்டெம் செல்கள் ஆகும். இவை சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் ரத்தத் தட்டுகள் எனப் பல்வேறு வகையான ரத்த அணுக்களை உருவாக்கும் திறன் கொண்டவை.
இந்த ஸ்டெம் செல்கள், ரத்தம் சார்ந்த புற்றுநோய்கள், மரபணு சார்ந்த சில வகை ரத்தக் கோளாறுகள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலக் குறைபாடுகள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
குழந்தை பிறந்த பிறகு, தொப்புள் கொடி மற்றும் நஞ்சுக்கொடியில் எஞ்சியிருக்கும் ரத்தமே தொப்புள் கொடி ரத்தம் எனப்படுகிறது. இதில் ஹீமோபயோடிக் ஸ்டெம் செல்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை சேகரிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, ஒரு சிறப்புச் செயல்முறையின் மூலம் மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாக்கப்படுகின்றன.
தொப்புள் கொடியில் 'வார்டன்ஸ் ஜெல்லி' (Wharton's Jelly) எனப்படும் ஜெல்லி போன்ற திசு உள்ளது. இதில் மீசென்கைமல் ஸ்டெம் செல்கள் (Mesenchymal Stem Cells – MSCs) காணப்படலாம்.
இந்த செல்கள், எலும்பு, குருத்தெலும்பு மற்றும் கொழுப்புத் திசுக்கள் போன்ற பல்வேறு வகையான செல்களாக மாறும் திறன் கொண்டவை. இதன் காரணமாக, திசுக்களைப் பழுதுபார்த்தல் மற்றும் மீளுருவாக்கம் தொடர்பான மருத்துவ ஆய்வுகளில் இவை முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இருப்பினும், தொப்புள் கொடி திசுவிலிருந்து பெறப்படும் மீசென்கைமல் ஸ்டெம் செல்களை சேமித்து வைப்பதால், எதிர்காலத்தில் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு, ஆட்டிசம் அல்லது நரம்பியல் கோளாறுகள் போன்ற பாதிப்புகளைக் குணப்படுத்த முடியும் என்று உறுதியாகக் கூற முடியாது. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பிரசவத்தின்போது குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டதும், அதில் எஞ்சியிருக்கும் ரத்தம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, கிருமி நீக்கம் செய்யப்பட்ட பையில் சேகரிக்கப்படுகிறது. இந்தச் செயல்முறை பொதுவாக பிரசவத்துக்குப் பிறகு உடனடியாக மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சேகரிப்பு முறையால் தாய்க்கோ, குழந்தைக்கோ கூடுதல் வலி ஏதும் ஏற்படுவதில்லை.
இவ்வாறு சேகரிக்கப்படும் ரத்தம் பின்னர் ஆய்வகத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கு ரத்தத்தில் உள்ள செல்களின் எண்ணிக்கை, அவற்றின் தரம், தொற்று பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பரிசோதிக்கப்படுகின்றன. உரிய தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் மாதிரிகள் மட்டுமே நீண்டகால சேமிப்புக்குத் தேர்வு செய்யப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகள் 'கிரையோபிரசர்வேஷன்' (Cryopreservation) எனப்படும் உறைநிலைப் பாதுகாப்பு முறையில் சேமிக்கப்படுகின்றன.
இவை நைட்ரஜனை பயன்படுத்தும் பிரத்யேக சேமிப்பு அமைப்பில் இவற்றில் சுமார் மைனஸ் 196 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் சேகரித்து வைக்கப்படுகின்றன. இவ்வாறு சேமித்து வைக்கப்படும் செல்கள் நீண்ட காலம் பிழைத்திருக்கும் சாத்தியங்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு மாதிரியும் எதிர்கால சிகிச்சைக்குப் பயன்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
தொப்புள்கொடி ரத்த மாற்று சிகிச்சைக்கு தற்போது நிரூபிக்கப்பட்ட மருத்துவப் பயன்பாடுகள் உள்ளன. குறிப்பாக, பொருத்தமான ஸ்டெம் செல்களை கொண்டு மேற்கொள்ளப்படும் மாற்று சிகிச்சை, ரத்தப் புற்றுநோய்கள், பீட்டா தலசீமியா மேஜர், சிக்கிள் செல் அனீமியா, சில வகையான நோய் எதிர்ப்பு மண்டலக் குறைபாடுகள் மற்றும் மரபணு சார்ந்த வளர்சிதை மாற்றக் கோளாறுகள் போன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க உதவுகிறது.
இருப்பினும், தொப்புள் கொடி ரத்த ஸ்டெம் செல்கள் அனைத்து வகையான நோய்களுக்கும் தீர்வாக அமைந்துவிடாது. இது நோயின் தன்மை, நோயாளியின் வயது, திசுப் பொருத்தம், சேகரிக்கப்பட்டுள்ள ஸ்டெம் செல்களின் எண்ணிக்கை மற்றும் தரம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் காரணிகளைக் கவனத்தில் கொண்டு முடிவு செய்யப்படுகிறது.




