செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி, நேபாளத்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால், பாகிஸ்தானின் இந்த வெற்றியைவிட, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றிதான் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக இரட்டைச் சதம் அடித்து 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் வெறும் 52 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்த அவர், இதில் 28 சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகளை விளாசினார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறுகையில், "லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 28 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதத்திற்கான புதிய சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இதற்கு முன்பு ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 29 பந்துகளில் சதம் அடித்து படைத்திருந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்" என்றார்.

"அவர் சிறப்பாக விளையாடினார். இது ஏ அணி. டி20 போட்டிகளில் அவரது திறமை அபாரமானது. அதேபோல், அவரது அதிரடி பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது. அவர் மிக நன்றாக விளையாடினார்" என்று கங்குலி தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், 'வீடியோ கேம்களில்கூட இத்தனை சிக்ஸர்களை அடிக்க முடியாது' என்றும், 'ஒரு முழு அணியால்கூட இத்தனை சிக்ஸர்களை அடிக்க முடியாது' என்றும் பாராட்டியுள்ளனர்.

'ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியை நடத்த முடியவில்லை' என்று பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி கூறினார்.

தனது யூட்யூப் சேனலில் வர்ணனை செய்தபோது, "ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 249 ரன்கள் என்ற நல்ல இலக்கை நிர்ணயித்திருந்தது. இரண்டாவது இன்னிங்ஸின்போது ஆடுகளத்தின் தன்மை மோசமடையும் எனத் தோன்றியது. ஆனால், மைதானத்தில் நடந்தது முற்றிலும் வேறாக இருந்தது. ஒரு முழு அணியால் அடிக்க முடியாத அளவுக்கு வைபவ் சிக்ஸர்களை விளாசினார்" என்றார்.

பாசித் அலி கூறுகையில், "ஒவர்கள் ஒவ்வொன்றிலும் அவர் மூன்று சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் அல்லது மூன்று பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் என அடித்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டின் அனைத்து சாதனைகளையும் பப்லு (வைபவ்) முறியடித்துவிட்டார்" என்றார்.

"சர்வதேச அளவில் வேறு எந்த அணியும் ஒரே நாளில் அடித்த சிக்ஸர்களைவிட அதிகமான சிக்ஸர்களை வைபவ் அடித்துள்ளார். அவர் ஓடி எடுத்த ரன்கள் வெறும் எட்டு மட்டுமே என்று நினைக்கிறேன். மீதமுள்ள சுமார் 196 ரன்களையும் பவுண்டரிகள் மூலமாகவே எடுத்துள்ளார். போட்டி நடைபெற்ற மைதானம் சிறிய மைதானம் அல்ல. அதேவேளையில், முந்தைய இரண்டு போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட முடியாததால் அவர்களுக்கு அழுத்தமும் இருந்தது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு வருவதற்கு முன்பாகவே தங்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்" என்று பாசித் அலி கூறியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது வாசிம், "வைபவ் சூர்யவன்ஷியின் சாதனையை வேறு யாராலும் முறியடிக்க முடியாது. ஒருவேளை அவரே தனது சாதனையை முறியடிக்கலாம்" என்று பாராட்டியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் தன்வீர் அகமது, "அவர் விளையாடும் விதம் மிகவும் அசாத்தியமான திறமையைக் காட்டுகிறது. 15 வயது சிறுவன் இவ்வாறு விளையாடுவது உண்மையிலேயே ஆச்சரியமானது" என்று கூறியுள்ளார்.

தன்வீர் அகமது, சூர்யவன்ஷியின் வயது குறித்தும் கேள்வி எழுப்பினார். அதேவேளையில், அவர் தனது பலவீனமான பகுதிகளில் இன்னும் கூடுதல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதுகுறித்துப் பேசிய அவர், "வைபவ் பேட்டிங் செய்த விதத்தைப் பார்த்தால், அவர் விரும்பிய இடங்களிலேயே பந்துகள் வந்தன. அவற்றைத் தொடர்ந்து அடித்தார். ஒருவேளை, அதனால்தான் சர்வதேச கிரிக்கெட்டில் அவரை இதேபோன்று விளையாட வைப்பதில்லை. ஏனெனில், சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வாறு சிக்ஸர்களை அடிப்பது அவ்வளவு எளிதானதல்ல. அதனால்தான், அணியுடன் தொடர்ந்து இருக்கவும், சுற்றுப் பயணங்களில் பங்கேற்கவும், கற்றுக் கொள்ளவும் அவருக்கு அவகாசம் அளிக்கப்படுவதாக இருக்கலாம். குறிப்பாக, கவர் திசையில் அவர் பலவீனமாக இருக்கும் பகுதிகளில் கூடுதல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டை விமர்சிக்கும் வகையில் தன்வீர் அகமது கூறுகையில், "வைபவ் பாகிஸ்தானில் இருந்திருந்தால், அவரை டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் சேர்த்திருப்பார்கள். ஏன், கேப்டனாக கூட நியமித்திருப்பார்கள்" என்றார்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல், யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "25 முதல் 30 வயதில் ஒருவர் சாதிக்கக் கூடிய விஷயங்களையும், அந்த வயதில் கிடைக்கக் கூடிய கிரிக்கெட் அனுபவத்தையும் புகழையும்" வைபவ் தனது 15 வயதிலேயே பெற்றுவிட்டதாகக் கூறினார்.

அதுகுறித்து அவர் பேசியபோது, "எந்த அணியாக இருந்தாலும், அதன் முடிவைப் பார்க்க வேண்டும். யாராவது ஒரு பந்தை பவுண்டரி எல்லையை நோக்கி அடித்தால்கூட இத்தனை ரன்கள் கிடைத்திருக்காது. நான் 52 பந்துகளை வீசினாலும், அதில் 28 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருக்காது. ஆனால், அவர் தனது பேட்டால் அதைச் சாதித்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் சொந்த அணியைச் சேர்ந்த வீரர்களுடனேயே வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தற்போது ஒப்பிடப்படத் தொடங்கியுள்ளது. கம்ரான் அக்மல் அதே உரையாடலில், "வைபவின் முதிர்ச்சியையும் கிரிக்கெட் குறித்த அவரது புரிதலையும் பார்த்தால், அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்குத் தயாராகிவிட்டார். 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவைத் தாண்டிய வீரராக அவர் மாறிவிட்டார். அவரது வயதைப் பொறுத்தவரை, இப்போதைக்கு அதை ஒதுக்கி வைத்துவிட வேண்டும். இங்கு, 15 வயதுக்கு உட்பட்ட பிரிவிலிருந்தே இதுபோன்ற வீரர்கள் உருவாவதை நாம் அனுமதிக்க வேண்டும்" எனக் கூறினார்.

மேலும், "இதுபோன்ற வீரர்களின் மனநிலையையும், அவர்கள் விளையாடும் கிரிக்கெட்டின் தரத்தையும் கவனிக்க வேண்டும். ஆனால், இங்கு அவர்களை மேல்மட்டத்தில் இருந்து கீழ்நோக்கி அழைத்து வருகிறார்கள். இதனால், ஆட்ட அணுகுமுறை, செயல்பாடு மற்றும் விளையாட்டில் நிச்சயமாக வேறுபாடு ஏற்படும்" என்றார். கூடுதலாக, பாகிஸ்தானில் ஏன் புதிய வீரர்களை முன்னிலைக்குக் கொண்டு வர முடியவில்லை என்றும் கம்ரான் கேள்வி எழுப்பினார்.

வைபவின் இன்னிங்ஸ் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய பாகிஸ்தான் விளையாட்டு ஆய்வாளர் முகமது மொஹ்சின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் ஓய்வறையில், "எத்தனை பேர் இருந்தார்கள்?" என்று கேட்கப்பட்டிருக்கும் என்றும், அதற்கு, "அவர் ஒருவர் மட்டும்தான் இருந்தார்" என்று அவர்கள் பதிலளித்து இருப்பார்கள் என்றும் கூறினார்.