கேரளாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி முகப் பொலிவு கிரீம் ஒன்றை பயன்படுத்தியதால், சிறுநீரக பாதிப்புக்கு உள்ளானதாக குற்றம்சாட்டப்படுகிறது. இது குறித்து கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவரைப் பரிசோதித்தபோது அவரது ரத்தத்தில் மெர்குரி (பாதரசம்) இருப்பது தெரிய வந்ததாக அந்த சிறுமிக்கு சிகிச்சையளித்த மருத்துவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து அந்த கிரீமை பரிசோதித்த போது, அதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிடப் பல ஆயிரம் மடங்கு அதிகமாக மெர்குரி இருப்பது தெரியவந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களில் மெர்குரி ஏன் சேர்க்கப்படுகிறது? அது சிறுநீரகத்தை எப்படிப் பாதிக்கிறது?

கேரளாவைச் சேர்ந்த அந்த 17 வயது சிறுமி, ஓராண்டுக்கும் மேலாகச் சருமத்தை வெண்மையாக்கும் ஒரு கிரீமைப் பயன்படுத்தி வந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அந்தக் கிரீம் குறித்த விளம்பரத்தைப் பார்த்து வாங்கியுள்ளார். முகத்தில் மட்டுமே பயன்படுத்திய அந்தக் கிரீம், ஆரம்பத்தில் முகத்தைப் பளிச்சென்று மாற்றியதுடன் முகப்பருக்களையும் மறையச் செய்துள்ளது. ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன.

"நான் ஒரு வருடத்துக்கு மேலாக இந்தக் கிரீமைப் பயன்படுத்தி வந்தேன். முதலில் முகம் பளிச் என்றும், முகப்பருக்கள் மறையவும் ஆரம்பித்தன. ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு முகத்தில் வீக்கம் போலத் தோன்ற ஆரம்பித்தது. எனது ரத்த அழுத்தம் குறைந்தது. எனக்கு மிகவும் சோர்வாக இருந்தது" என்று அந்தச் சிறுமி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அவருக்குச் சிகிச்சை அளித்த சிறுநீரக மருத்துவர் எஸ்.கௌரி பிபிசி தமிழிடம் கூறுகையில், சிறுமிக்கு முகம், கால்களில் வீக்கம், அதிக சோர்வு, தூக்கமின்மை, அவ்வப்போது தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததாகத் தெரிவித்தார்.

"சிறுநீர் நுரைத்துப் போனதும் கவனிக்கப்பட்டுள்ளது. சிறுநீரைப் பரிசோதித்தபோது அதிக அளவில் புரதம் வெளியேறுவது தெரியவந்தது. இதனால் ரத்தத்தில் ஆல்புமின் எனப்படும் புரதத்தின் அளவு குறைந்திருந்தது. அதேநேரத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்திருந்தது. இவை அனைத்தும் நெஃப்ரோட்டிக் சிண்ட்ரோம் எனப்படும் சிறுநீரகப் பாதிப்பு நிலையின் அறிகுறிகள்.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் மெர்குரி இருந்தது தெரியவந்தது. எனவே அவர் பயன்படுத்திய கிரீமை பரிசோதித்தோம். அதில் அளவுக்கு அதிகமான மெர்குரி இருப்பதை கண்டுபிடித்தோம். சிறுநீரகத் திசுப் பரிசோதனையில், சிறுமிக்கு மெம்ப்ரனஸ் நெஃப்ரோபதி இருப்பது கண்டறியப்பட்டது" என்று மருத்துவர் கௌரி விளக்கினார்.

சிறுநீரகத்தில் ரத்தத்தை வடிகட்டும் மிக நுண்ணிய அமைப்புகள் குளோமருலஸ் எனப்படுகின்றன. ரத்தத்தில் இருக்க வேண்டிய புரதங்கள் சிறுநீரில் கலந்து வெளியேறாமல் தடுப்பது இந்த அமைப்புகளின் முக்கியப் பணி.

மெர்குரி உடலுக்குள் செல்லும்போது, நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இதனால் உடலுக்குச் சொந்தமான சில புரதங்களையே எதிரிகளாகக் கருதி, அவற்றைத் தாக்கும் எதிர்ப்புப் புரதங்களை நோயெதிர்ப்பு மண்டலம் உருவாக்கலாம். இதன் விளைவாகச் சிறுநீரகத்தின் வடிகட்டிப் படலங்கள் பாதிக்கப்படலாம்.

"சருமத்தில் பூசப்படும் கிரீமில் உள்ள மெர்குரி, சருமத்தின் வழியே உடலுக்குள் செல்கிறது. இவை சிறுநீரகத்தில் வடிகட்டிப் படலங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால், ரத்தத்தில் இருக்க வேண்டிய புரதங்கள் சிறுநீர் வழியாக வெளியேறத் தொடங்குகின்றன. இதுவே மெம்ப்ரனஸ் நெஃப்ரோபதி பாதிப்பின் முக்கிய விளைவு" என்று மருத்துவர் கௌரி விளக்குகிறார்.

சிறுமியின் ரத்தத்தில் மெர்குரி இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பயன்படுத்திய கிரீமும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

"அதில் ஒரு மில்லியனில் 12,500 ppm மெர்குரி இருந்தது தெரியவந்தது" என்று மருத்துவர் கௌரி குறிப்பிடுகிறார்.

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை மற்றும் இந்திய விதிகளின்படி, சாதாரண அழகுசாதனப் பொருள்களில் தற்செயலாகக் கலந்திருக்கும் மெர்குரியின் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவு ஒரு மில்லியனில் 1 ppm மட்டுமே.

சிறுமியின் உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும், முழுமையாகக் குணமடைய இன்னும் காலம் ஆகும் என்றும் மருத்துவர் கௌரி கூறுகிறார். தொடர் பயன்பாட்டின் காரணமாகவே இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

மெர்குரி சேர்க்கப்படுவதற்கு முக்கியக் காரணம், அது சருமத்தின் நிறத்தைக் கட்டுப்படுத்தும் மெலனின் உற்பத்தியைக் குறைக்கும் தன்மை கொண்டிருப்பதுதான்.

சருமத்துக்கு நிறமளிக்கும் மெலனின் என்ற நிறமியை உருவாக்குவதில் டைரோசினேஸ் என்ற நொதி முக்கியப் பங்கு வகிக்கிறது.

மெர்குரி சேர்மங்கள் இந்த நொதிய செயல்பாட்டில் குறுக்கிட்டு, மெலனின் உற்பத்தியைக் குறைக்கின்றன. இதனால் சருமம் வெளிர்ந்த நிறத்தில் தோன்றுகிறது.

"மெர்குரி சருமத்துக்கு நிறம் கொடுக்கக்கூடிய மெலனின் உற்பத்தியைக் குறைக்கிறது. இதனால் சருமம் வெள்ளையாவது போலத் தோன்றும். சில நாட்கள் அல்லது சில வாரங்களில் இந்த மாற்றம் ஏற்படலாம். எனவே, உடனடியாகச் சருமம் வெள்ளையாகும், முகப்பருக்கள் மறையும் என்ற விளம்பரங்களை இளைஞர்கள் கவனத்துடன் அணுக வேண்டும்" என்கிறார் மருத்துவர் கௌரி.